திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி யுவராஜ் (30). இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு என பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த யுவராஜ் நேற்று (ஜன.19) ஆத்துப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளதாக கும்மிடிப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த உதவி ஆய்வாளர் பாஸ்கர், இரண்டாம் நிலை காவலர் விமல் ராஜ் ஆகியோர் ஆத்துப்பக்கத்தில் வீட்டில் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி யுவராஜை மடக்கிப் பிடித்ததாக கூறப்படுகிறது.
உதவி ஆய்வாளரின் கை பிடியில் சிக்கிய யுவராஜை குடும்பத்தினர் காப்பாற்ற முயற்சித்த போது அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குற்றவாளி யுவராஜ் உதவி ஆய்வாளர் பாஸ்கரின் கையை கடித்து விட்டு லாவகமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் காயத்துடன் கோட்டக்கரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் பாஸ்கர், சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், சரித்திர பதிவேடு குற்றவாளி யுவராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாடகை பாக்கி ரூ.52 லட்சம் செலுத்துக: 'அண்ணா நகர் கிளப்'புக்கு கெடு...!