புதுக்கோட்டை: ஆலங்குடி கலிபுல்லாநகர் பகுதியைச் சேர்ந்த துப்பாக்கி முருகன் என்பவரது மகன் விஜய் (எ) செல்வகணபதி. ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்துவந்தார்.
இவரது தம்பி மணியும், ஆலங்குடி பகுதியில் பல்வேறு கொலைச் சம்பவங்களின் குற்றவாளியான அப்துல் ரகுமான் என்பவரும், ஜூலை 15ஆம் தேதி, செந்தில்ராஜா (எ) சசி என்பவரின் திருணத்திற்கு சென்றுள்ளனர். அந்த இருவரும் அழைப்பு இல்லாமல் நிகழ்ச்சிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பல்வேறு கொலைவழக்குகளில் தொடர்புடைய அப்துல் ரகுமான் திருமண மண்படபத்தின் அருகில் நின்றிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர், மணி, அப்துல் ரகுமானை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் (எ) செல்வகணபதி கல்லுக்குண்டு கரைப் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா போதையில் இருந்த போது அந்த வழியாக செந்தில் ராஜா மது போதையில் வந்துள்ளார்.
அப்போது செந்தில் ராஜாவை வழிமறித்த விஜய் தங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை. திருமணத்திற்கு வந்த தனது தம்பி காவல்துறையினரை வைத்து விரட்டியது ஏன் எனக் கேட்டுள்ளார்.
போதை தகராறு
இதனால் போதையில் இருந்த இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில் ராஜா தனது தம்பி சின்னமுத்துவை அழைக்க, சம்பவ இடத்திற்கு வந்த சின்னமுத்துவை விஜயும் அவருடன் இருந்தவர்களும் அடித்துள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த சின்னமுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.
இதனையடுத்து, கல்லுக்குண்டு, பாலக்கரைப் பகுதியில் போதையில் இருந்த விஜயை அடையாளம் தெரியாத 10க்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இருந்த தப்பித்த விஜய், அருகிலிருந்த பள்ளிவாசல் மண்டபத்திற்குள் ஒளிந்துள்ளார்.
நீண்ட நேரம் கழித்து தன்னைத் தாக்க வந்தவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக நினைத்து ஆலங்குடியில் இருந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த விஜயை வழியில் தடுத்து சரமரியாக வெட்டியுள்ளனர்.
குற்றவாளிகளை தேடும் போலீசார்
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி காவல்துறையினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஜயை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்தக் கொலை குறித்து ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளிலும் உருவம் தெளிவாக தெரியாதததால், குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் காவலதுறையினர் திணறி வருகின்றனர். இதுவரை சந்தேகத்தின் பேரில் 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.