ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த 2016 முதல் 2021 வரை பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தற்போது புஜங்கனூரில் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்ததில் காயம் பட்டதாக கூறி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர், நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் புஜங்கனூரில் இருந்து தனது பைக்கில் பவானிசாகர் ஸ்டேட் பேங்க் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம் பட்டி பிரிவு அருகே சென்றபோது தன் பைக்கின் பின்னால் ஒரு கார் வந்தது. திடீரென பைக்கை வழிமறித்து காரில் இருந்து இறங்கிய 6 நபர்கள் கண்ணை மறைத்து துணியை கட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறினார்.
பின் அரை மணி நேரம் கார் சென்றபின் அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் நேரு நகரை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன் என்பவர் 3 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தன்னை விடுவிப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். பணம் வீட்டில் உள்ளதாக கூறியதால் ஈஸ்வரனை, மிலிட்டரி சரவணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.
பின் வீட்டில் வைத்திருந்த பணம் ரூ.1.50 கோடியை கொடுத்தவுடன் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், கடத்திச் சென்ற நபர்கள் தாக்கியதில் கால் தொடை மற்றும் பின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தை பறித்துச் சென்ற கும்பல் மீது பவானிசாகர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒளி பாய்ச்சும் விளக்கு கோபுரம் கோவில் மீது சாய்ந்தது