தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் முருகன். அவரது மகன் பாண்டியன் (20). இவர் வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கல்லூரியில் நண்பர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 10ஆம் தேதி வீட்டிற்கு வந்த பாண்டி, கல்லூரியில் நடந்த பிரச்னை குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
தந்தை முருகன் பாண்டியனுக்கு ஆறுதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரியில் நடந்த பிரச்னையில் விரக்தியடைந்த பாண்டி, இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வைரவன் தடுப்பணைக்கு புதன் கிழமை (பிப்.12) சென்றார். பின்பு அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, செல்ஃபோனை கரையில் வைத்துவிட்டு ஆற்றில் குதித்துள்ளார்.
வெளியே சென்ற மகன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் குமுளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே வைரவன் தடுப்பணையில் இருசக்கர வாகனம் ஒன்று நீண்ட நேரமாக நிற்பது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ஆற்றில் குதித்த கல்லூரி மாணவர் பாண்டியனை கடந்த இரண்டு நாள்களாக தேடிவந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் முல்லை பெரியாறு ஆற்றில் இன்று (பிப்.12) தேடுதல் பணி நடைபெற்றது. சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பிறகு வைரவன் அணையில் பாண்டியனின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலைகளை அலுவலர்கள் சரியாக ஆய்வு செய்வதில்லை - மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு!