சென்னை: வண்ணாரப்பேட்டை ரவுடி விக்னேஷ் உள்பட அவரது குடும்பத்தார் 14 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற ரூட் விக்கி. இவர் மீது ராயபுரம், முத்தியால்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகளும், தாம்பரம் கொருக்குப்பேட்டை ஆகிய ரயில்வே காவல் நிலையங்களில் செயின்பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பல்வேறு வழக்குகளில் காவல் துறையினர் தேடிவந்ததால் விக்னேஷ் தலைமறைவாக இருந்துவந்தார்.
ராயபுரம் ரயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 12 சவரன் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் ராயபுரம் காவல் துறையினர் விக்னேஷை தீவிரமாக தேடி வந்தனர். இச்சூழலில், நேற்று (அக்டோபர் 24) பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் தனது வீட்டிற்கு விக்னேஷ் வந்திருப்பதாக வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி சபின் தலைமையிலான காவல் துறையினர் விக்னேஷை பிடிக்க அங்கு விரைந்தனர். மேலும், விக்னேஷை பிடிக்க காவல் துறையினர் முயற்சி செய்தபோது அவரது குடும்பத்தினர் கைது செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பதற்றத்தை சமாளிக்க அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
காவல் துறையினர் கைது செய்யாமல் இருக்க ரவுடி விக்னேஷை கீழே தள்ளி விட்டு குடும்பத்தினர் அனைவரும் விக்னேஷ் மீது விழுந்து கைதுசெய்ய விடாமல் அரண் போல் காத்தனர். மேலும், கைது செய்ய வந்த காவல் துறையினர் மீது கட்டைகளை கொண்டு தாக்க முயற்சித்தனர்.
குடும்பத்தாரின் தடையை மீறி ரவுடி விக்னேஷை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 270 போதை மாத்திரைகள், ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விக்னேஷை கைது செய்யவிடாமல் தடுத்த அவருடைய தாய் சாந்தி, மனைவி சசிகலா, தந்தை மோகன் மற்றும் உறவினர்கள் தீபா, ஆன்ட்டோ, கிளாரா, அனிதா, கலைவாணி, கஜலட்சுமி, சந்திரா, திவ்யா, நந்தகுமார் ஆகியோர் உள்பட 14 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விக்னேஷ் உள்பட 14 பேர் மீதும் வழக்குபதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தந்தங்களுக்காக கொல்லப்பட்ட யானை?