திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதை பொருள் கடத்தல் முகமது ரிகாஷிடமிருந்து சிறை அலுவலர்கள் இன்று (ஜூன் 16) செல்போன் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர் ஏற்கனவே சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது செல்போன் உள்பட சகல வசதிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காரணத்திற்காக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதன்படி பிரபல ரவுடி, போலீஸ் பக்ருதீன் அவனது கூட்டாளிகளும், போதைப் பொருள் கடத்தல்காரர்களான முகமது ரிகாஸ், அவனது கூட்டாளிகள் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது அனைவரும் சேர்ந்து ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தி, அதன் மூலம் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களிடம் உரையாடி வந்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், முகமது ரிகாஸ் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது மீண்டும் முகமது ரிகாஸிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சாதாரண செல்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிபோதையில் பெண் காவலரைத் தாக்கிய நபர் கைது