தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கீழ வெள்ளக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஹரிமோகன் (29), வல்லம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (36), இவர்களின் நண்பர்கள் கட்டபொம்மன், மனோஜ்குமார், மதன் ஆகிய ஐந்து பேர் காரில் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு நேற்றிரவு (மார்ச் 7) 10 மணியளவில் வீடு திரும்பினர்.
அப்போது முக்கூடல் அடுத்த இடைகால் சர்க்கரை ஆலையிலிருந்து பழுதடைந்த இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு, கனரக வாகனம் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில் ஆலங்குளம் பெட்ரோல் சேமிப்பு நிலையம் அருகே வரும்போது இருட்டில் காரின் பக்கவாட்டில், எதிரே வந்த கனரக வாகனத்தின் இயந்திரம் உரசியதால், கார் நிலைதடுமாறி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது காரின் முன்பகுதி நொறுங்கியது.
இதில் காரில் இருந்த ஹரிமோகன், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டபொம்மனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் ஆய்வாளர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர் பாரத் லிங்கம், சில காவலர்கள், காரில் இருந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கனரக வாகன ஓட்டுநர் மன்னார்குடியைச் சேர்ந்த மோதிலால் (60) என்பவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியல்!