ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மதுபான கடைகள் காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரை திறக்கப்படுவதால், மாவட்டத்திலிருந்து மதுப்பிரியர்கள் கர்நாடக மாநில எல்லைக்குச் சென்று மதுபானங்களை வாங்கிவருகின்றனர்.
மதுவிலக்கு காவல் துறையினரும் இரு மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்களைத் தணிக்கை செய்து கர்நாடக மாநில மதுபானங்களை பறிமுதல் செய்துவருகின்றனர்.
இச்சூழலில், பண்ணாரி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே ஸ்கூட்டரில் சென்ற இருவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களின் வாகனம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
அப்போது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியிலிருந்து ஒருவிதமான சத்தம் வந்ததைக் கண்ட காவல் துறையினர், வண்டியின் முன்பக்கத்தைப் பிரித்துப் பார்த்தனர். அதில் 375 மில்லி அளவுள்ள 20 கர்நாடக மாநிலத்தில் வாங்கப்பட்ட மது குப்பிகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இருவரும் கோபி அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், ராஜன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடமிருந்து மது குப்பிகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்ததோடு இருவர் மீதும் வழக்குப்பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர்.