கயா(பிகார்): பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள பாக்தாஹா கிராமத்தில் ராணுவப் பயிற்சியின்போது ராணுவ விமானம் இன்று(ஜன.28) கோதுமை வயலில் விழுந்து, நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கயா பிரதான சாலையில் பஹர்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ராணுவ கான்ட் விமான நிலையம் அருகே பயிற்சியின்போது விமானம் புறப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த விமானி, அதை கோதுமை வயலில் தரையிறக்க முடிவு செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கே விழுந்து நொறுங்கியது.
இதனைக் கண்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும் பயிற்சி அகாடமி (OTA) அலுவலர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.
சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ வீரர்கள், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த காயமடைந்த விமானிகளை அழைத்துச்சென்றனர். இதுகுறித்து அலுவலர்கள் பேச மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து உள்ளூர் கிராமவாசி தேவானந்த் சவுத்ரி (நேரில் பார்த்தவர்), "காலை 6:30 மணியளவில் ராணுவ விமானம் திடீரென வயலில் விழுந்ததை நாங்கள் பார்த்தோம்.
அதன் பிறகு நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தோம். விமானத்தில் இரண்டு பேர் இருந்தனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் பெரிதாக ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில் ராணுவ வீரர்கள் வந்து அவர்களை மீட்டு, விமானத்தை தள்ளி சாலைக்கு கொண்டு சென்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி 28 நாள்கள் கிடையாது... 30 நாள்களுக்கு வேலிடிட்டிய மாத்துங்க... அதிரடி உத்தரவு...