சென்னை: வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் முதன்மை நிதி அலுவலர் கணேஷ் கார்த்திகேயன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மேலாளராக சைமன் சாக்கோ என்பவர் பணியாற்றி வந்ததாகவும், வரவு செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளை கணக்காளர் ஹரிஹரன் கவனித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் மேலாளர் சைமன் சாக்கோ இறந்த பின்பு அவரது கையெழுத்தை காசோலைகளில் போலியாக பதிவிட்டு கணக்காளர் ஹரிஹரன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வங்கி கணக்கில் இருந்து 1 கோடியே 63 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். கையாடல் செய்த கணக்காளர் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (52) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிஹரனை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், ஹரிஹரன் வங்கி கணக்கில் இருந்து யார் யார் வங்கி கணக்கிற்கு பணம் கைமாறி உள்ளது என்பதை கண்டறிந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கைதான ஹரிஹரனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டம்மி துப்பாக்கி வைத்திருந்த ரவுடி கைது