சென்னை: கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெகதம்மாள். ஜெகதம்மாள், அம்பத்தூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் (ஏப். 16) வழக்கம் போல, அவரது கணவர் மணிகன்டன் இவரது வீட்டின் கீழே தனது உயர் ரக இருசக்கர வாகனமான பல்சர் வாகனத்தை நிறுத்தி விட்டு, மறுநாள் காலை (ஏப். 17) வந்து பார்த்தபோது, வீட்டின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஜெகத்தம்மாள், தான் பணியாற்றும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், முகக்கவசம் அணிந்து வந்த நபர் பல்சர் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து, பைக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவலர்கள் இருசக்கர வாகன கொள்ளையனை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே, இதே குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக உயர் ரக இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதில், இதுவரை கொள்ளையனை பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், தொடரும் இருசக்கர வாகன திருட்டை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியையும் அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். பெண் தலைமை காவலர் வீட்டிலே கைவரிசை காட்டிய அந்த கொள்ளையனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: வெங்கடாபுரம் ராமர் கோயிலில் திருட்டு