சென்னை: விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்தவர் வாராகி (46). இவர் 'சிவா மனசுல புஷ்பா' திரைப்படத்தை இயக்கி நடித்ததுடன் சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், 'இந்தியன் ரிப்போர்டர்' என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றையும் நடத்தி வருகிறார்.இதை தொடர்ந்து, கடந்த ஏப். 24 ஆம் தேதி மறைந்த சின்னத்திரை நடிகரின் மனைவியான சுஜிதா என்ற பெண்ணை, வாராகி 3ஆம் தாரமாக திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வாராகியை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஜாமினில் வெளிவந்த வாராகி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஏப். 29) புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு மறைந்த சின்னத்திரை நடிகர் சாய்பிரசாத் என்பவரின் மனைவி சுஜிதா, அவரின் தாய் ராதா, தந்தை செல்வராஜ் ஆகியோருடன் என்னை அணுகி, குடும்ப சூழலை காரணம் காட்டி என்னிடம் வேலை கேட்டனர். அதனால், மனிதாபிமான அடிப்படையில் நான் நடத்தி வரும் பத்திரிக்கை அலுவலகத்தில் சுஜிதாவிற்கு வேலை கொடுத்து பணியமர்த்தினேன்.
மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சுஜிதா என்னிடம் வேலை பார்த்து வந்த நிலையில், அலுவலக தொலைபேசியில் இருந்து எனக்கு அறிமுகமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்களை எடுத்து, அவர்களிடம் நள்ளிரவு நேரங்களில் தவறான நோக்கத்துடன் தொடர்புகொண்டு பேசி பணம் பறிப்பதாக தகவல் கிடைத்தது. அதன் காரணமாக சுஜிதாவை தான் வேலையில் இருந்து நிறுத்தினேன். பின் அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியும் பணிக்கு மீண்டும் சுஜிதாவை சேர்க்காமல் தவிர்த்துவிட்டேன்.
அதன்பின் கடந்த ஏப். 17 ஆம் தேதி என்னை செல்ஃபோனில் தொடர்புகொண்ட சுஜிதா, ஆன்லைன் மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தன்னை வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தக்கூறி மிரட்டுவதாகவும், சுஜிதாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அதை அவரது தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி மிரட்டுவதாகவும் என்னிடம் கூறினார். அப்புகைப்படங்களை எனக்கும் அனுப்பிவைத்து, அதிலிருந்து மீள்வதற்கு என்னிடம் பண உதவி கோரினார். மேலும், பெறும் பணத்தை கோவையில் உள்ள அவருடைய உறவினரான வழக்கறிஞர் ஆனந்தன் என்பவரிடம் இருந்து இரண்டு நாட்களில் பெற்றுத் தருவதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவரின் சூழலை உணர்ந்து, நான் வெளியூரில் இருந்ததால் இரண்டு நாள்கள் கழித்து கடந்த ஏப். 19 ஆம் தேதி எனது நண்பரான பாண்டியன் என்பவருடன் சென்று, எனது மகளுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை சுஜிதாவிடம் கொடுத்தேன். மகளுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டிய பணம் என்பதால், இன்னும் மூன்று தினங்களில் திருப்பி அளிக்குமாறு கூறினேன்.
ஆனால், மூன்று தினங்கள் கழித்தும் சுஜிதா பணத்தை திருப்பித் தராததால் அவரை நான் தொடர்புகொண்டு கேட்டபோது, பணத்தை ஏற்பாடு செய்ய வெளியே வந்துள்ளதால், இரவு 11 மணிக்கு அவரின் வீட்டுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அதன் அடிப்படையில்தான், ஏப். 23ஆம் தேதி அவருடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்று அழைப்பு மணியை அடித்தேன். ஆனால், அப்போது யாரும் கதவைத் திறக்காததாலும், செல்ஃபோன் அழைப்புக்கு பதில் அளிக்காததாலும் நான் திரும்பி வந்துவிட்டேன்.
பின்னர், மறுநாளும் (ஏப். 24) இதே நிலையில் நீடித்தது. அன்று மாலை எனது வீட்டுக்கு வந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் சுஜிதா கொடுத்த புகாருக்காக என்னை கைது செய்வதாகக் கூறி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின் அங்கு வைத்து என்னை விசாரிக்காமலேயே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், நான் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா துறையினருக்கு எதிராக பல பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளதால் உள்நோக்கத்துடன் சிலர் சுஜிதாவுக்கு பின்புலமாக செயல்பட்டு என் மீது பொய்யான குற்றச்சாட்டை உருவாக்கி வழக்கில் சிக்க வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தன் மீது பொய்யான புகார் அளித்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த சுஜிதா மற்றும் அவருக்கு பின்புலனாக செயல்படும் நபர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
புகாருடன் சுஜிதா பணம் கேட்டு அனுப்பிய ஆடியோ பதிவுகள் மற்றும் அவர் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படங்கள் என அனைத்து ஆதாரங்களுடன் திரைப்பட இயக்குநர் வாராகி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்