சென்னை: வானகரம் சோதனை சாவடி அருகே நேற்று இரவு மதுரவாயல் காவல்நிலைய தலைமை காவலர் ராதாகிருஷ்ணன், குணசேகரன், பிரபு உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரது இடுப்பில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.
மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை பறிமுதல் செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் போரூர் பகுதியை சேர்ந்த ரவுடி செல்வம் என்கிற ரோஸ் பாக்கியம் என்பது தெரியவந்தது. மேலும் ரவுடி செல்வம் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதால் எதிரிகள் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பாதுகாப்புக்காக டம்மி துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார் ரவுடி செல்வம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதல் விவகாரம் - இளம்பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை