கடலூர்: புவனகிரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் 2.9.22 வெள்ளிகிழமை வழக்கம் போல் பள்ளி செயல்பட தொடங்கியது.
இந்த நிலையில் பள்ளியில் கழிவறை அருகில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை கண்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் புவனகிரி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த ஆய்வாளர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் சந்தோஷ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்தில் ஆண் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் அதே பள்ளியில் பயின்று வரும் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. மாணவி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து பள்ளி சுற்று சுவர் அருகே புதரில் வீசி சென்றுள்ளார். காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், மாணவியின் ஊரை சார்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் காவல்துறையினர் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில். மாணவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதுவரை பெண் தரப்பிலிருந்து முறையான புகார் அளிக்கவில்லை என்றும் இதனால் மாணவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவனும் மாணவியும் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதாலும், மாணவன் மீது புகார் அளிக்கபடாததாலும் இறந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்க போலீசார் யார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பம் ஆக்கியதும், மாணவி கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசி சென்ற சம்பவமும் புவனகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரத்தில் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை பாய வாய்ப்பு..