தூத்துக்குடி: குளத்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கும், மாவட்ட காவல்துறைக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் குளத்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) முருகன் தலைமையிலான காவல் துறையினர், கீழவைப்பாறு பகுதியில் சந்தேகப்படும்படி ஆள் இல்லாமல் தனியாக நின்றுகொண்டிருந்த வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது, 4 மூட்டைகளில் ரூபாய் 7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரிலிருந்த 76 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தொடரும் போதைப் பொருள் கடத்தல்
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்மந்தப்பட்டதாக 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 348 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் போதைப் பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உள்பட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 932 பேர் கைது செய்யப்பட்டு 75,000 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.