சென்னை: சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் குற்றம் நடக்காமல் தடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் குற்ற நோக்கத்துடன் சுற்றி திரியும் நபர்களை கண்டறிந்து முன்கூட்டி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி நகர் பகுதியில், சிலர் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வருவதாகவும், கத்தியுடன் வலம் வருவதாகவும் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் தொடர்ந்து தகவல்கள் வந்தன. இதையடுத்து தனிப்படை காவலர்கள் கத்தியுடன் வலம் வந்த அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
நேற்று (ஜூலை 10) சுனாமி நகர் பகுதியில் கத்தியுடன் வலம் வந்த மணிகண்டன் என்கிற குண்டுமணி (23), மணிகண்டன் (19), ஜெடில்சன் என்கிற ஜெடி (26), ஸ்ரீநாத் (19) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து கூர்மையான கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, செம்மஞ்சேரியில் குற்றம் செய்யும் நோக்கத்தில் சுற்றித்திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்ட ரவுடி கைது