பாட்னா (பீகார்): 2013ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் இருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
ஹைதர் அலி, நோமன் அன்சாரி, முகமது முஜிபுல்லா அன்சாரி, இம்தியாஸ் ஆலம், அகமது உசேன், ஃபக்ருதீன், முகமது ஃபிரோஸ் அஸ்லாம், இம்தியாஸ் அன்சாரி, முகமது இப்திகார் ஆலம், அசாருதீன் குரேஷி மற்றும் தௌபிக் அன்சாரி ஆகிய 11 பேர் குற்றவாளிகள் என 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் சிறுவர் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொரு நபருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 9 பேருக்கும், தேசிய புலனாய்வு முகமை் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது.
அதில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 10 வருட சிறை தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கு
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 2013ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அப்போதைய குஜராத் முதலமைச்சரும், பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
2014ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலையொட்டி அந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் நடந்த இடத்துக்கு அருகே பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 11 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: புதுமணத் தம்பதி திருமணமான மூன்றே நாள்களில் உயிரிழப்பு!