ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர், அம்புரோஸ் மகன் சார்லஸ்.
இவர் ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளராக உள்ளார்.
இந்நிலையில், சார்லஸிடம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கமிஷன்மண்டி வைத்து நடத்திவரும் ஜேசு, அவரின் மகன்கள் மாணிக்கம், ஜார்ஜ் ஆகியோர் கடந்த 2015ஆம் ஆண்டு, மிளகாய் வாங்கி ஸ்டாக் வைத்து மிளகாயின் தேவை அதிகமான நேரத்தில், அதை விற்பனை செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும்; அதற்குப் பணம் தருமாறும், விற்பனை லாபத்தில் 25 விழுக்காடு கமிஷனாக தருவதாகவும் கூறியுள்ளனர்.
ஆசை வார்த்தையினால் மோசடி
மேலும், சார்லஸை சென்னைக்கு அழைத்துச் சென்று குளிர்சாதன வசதியுடன் மிளகாய் இருப்பு வைக்கும் பகுதியைக் காட்டி ஆசை வார்த்தைக் கூறி உள்ளனர்.
இவர்களின் பேச்சை நம்பிய சார்லஸ் அவர்கள் கேட்டுக்கொண்டபடி, ரூ.38 லட்சத்து 5 ஆயிரத்து 500 பணத்தினை கடனாக கொடுத்துள்ளார்.
இந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட தந்தை, மகன்கள் ஒப்புக்கொண்டபடி கமிஷன் தராமல் இருந்ததோடு, தனது பணத்தை திருப்பிக் கேட்டபோது அதனையும் தராமல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
தொடர் மோசடி
இதேபோன்று, இவர்கள் பரமக்குடியில் கிஷோர் குமாரிடம் ரூ.31 லட்சத்து 50 ஆயிரமும், மனோஜ்பாபு என்பவரிடம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரமும் பணத்தையும் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இதைப்பற்றி சமீபத்தில் அறிந்த சார்லஸ் தானும் இதேபோல ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் புகார் செய்தார்.
அவரின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ராணி, காவல் துணை ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் மாணிக்கத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக மாணிக்கத்தின் தந்தை ஜேசு, தம்பி ஜார்ஜ் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.