ஈரோடு: கஞ்சா பதுக்கலில் ஈடுபட்ட இரண்டு பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோலார் வசந்தம் நகர் கோல்டன் சிட்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலில் அடிப்படையில் காவல் துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கோல்டன் சிட்டியைச் சேர்ந்த மணி மகன் கேசவன்(34) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, வீட்டில் மூட்டை, மூட்டையாக கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
கேசவன் மற்றும் அவரது மனைவி பிருந்தா(24) ஆகியோரிடம் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் இருவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை என்றும், கடந்த ஒன்றரை ஆண்டாக கோல்டன் சிட்டியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
மேலும், ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை ரயில், சரக்கு வாகனங்களில் சேலத்திற்கு கடத்தி வந்து, அங்கிருந்து ஈரோட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்தது அம்பலமானது.
தொடர்ந்து இருவரையும் கைது செய்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த 232.5 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், இதில் தொடர்புடைய மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.