ஈரோடு மாவட்டம் முழுவதும் நடத்திய தீவிர சோதனையில் சட்ட விரோத லாட்டரி விற்பனை, கஞ்சா, போதைப்பொருள் விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 202 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கைகள்
வழக்குகளில் தொடர்புடையவர்கள் வசமிருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகள், 21.5 கிலோ கஞ்சா, புகையிலை, சுமார் 1.5 டன் மதிப்புள்ள பான் மசாலா இரண்டு லட்சம்,09 ஆயிரத்து,625 பாக்கெட்டுகள், எட்டு சேவல்கள், பணம் ஒரு லட்சத்து,75 ஆயிரத்து,880 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுடமை ஆக்கப்பட்டு ஆயுதப்படை வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க 96552-20100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் மே 7ஆம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற பின்னர் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட புகார்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.