புதுக்கோட்டை: சாலையருகே கார் தலைக்குப்புற கவிந்த விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிராப்பள்ளியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியின் டயர் திடீரென கழன்று சாலையில் ஓடியது. இந்த நிலையில், ஆலங்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர், டயரில் மோதாமல் இருக்க வேகமாக திருப்பிய போது, அந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் புதுக்கோட்டையைச் ஆலங்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய மலர்விழி(38), மேரி(36) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற ஆரோக்கிய மலர்விழியின் கணவர் அருள்தாஸ், பலத்த காயமடைந்தார். அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன், விசாரணை மேற்கொண்டு இறந்தவர்களின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தார்.