திருச்சி: சேனப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துமணி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "எனது மகன் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக எனது கணவர் மற்றும் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டு தேர்வானது நடைபெற்று வருகிறது. எனவே எனது மகனை தேர்வு எழுதும் வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
மேலும் எனது மகன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில், பொது தேர்வு முடியும் வரை மாணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கமாட்டார்கள். தேர்வு முடிந்த பின்பு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: காவல் துறைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம்; மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு