திருநெல்வேலி: கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கும்பகோணத்திலிருந்து ரயிலில் பதுக்கி கொண்டுவரப்பட்ட 180 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் இன்று (ஆக.13) நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் நான்கு அட்டைப் பெட்டிகள், ஒரு சாக்கு மூட்டையுடன் சந்தேகமளிக்கும் வகையில் நின்றிருந்துள்ளனர்.
180 மதுபாட்டில்கள் பறிமுதல்
காவலர்கள் அவர்களைச் சோதனை செய்தபோது, அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், சாக்கு மூட்டையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தம்(21), விக்னேஷ் (20) என்பது தெரியவந்தது. இருவரும் சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில், கும்பகோணத்தில் ஏறி நெல்லை சந்திப்பு நிலையத்தில் இறங்கியதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து தலா 750மி.லி., அளவு கொண்ட 180 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாயாகும். மதுபாட்டில்களை கும்பகோணத்தில் இருந்து வாங்கி வந்ததாக விசாரணையின் போது இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும்
முக்கிய குற்றவாளி தலைமறைவு
வழக்கில் முக்கிய குற்றவாளி தலைமறைவானது தெரியவந்துள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த கருங்கடல் பகுதியை சேர்ந்த பீட்டர் பிரபாகரன் தனது நண்பர்கள் மூலம் புதுச்சேரியில் இருந்து இதுபோன்று மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து நெல்லை தூத்துக்குடி பகுதிகளில் டாஸ்மாக் விடுமுறை தினத்தில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சுதந்திரதினம் அன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்பதால், தனது நண்பர்களான சிவானந்தம் விக்னேஷிடம் மதுபாட்டில்களை வாங்கி வரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் பீட்டர். எதிர்பாராத விதமாக இருவரும் காவல்துறையினரிடம் சிக்கி விட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பீட்டர் பிரபாகரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிவிஎஸ் XL வாகனங்களை குறிவைத்து திருடிய பலே திருடன் கைது