வேலூர் அருகேயுள்ள தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான வெலதிகாமணிபெண்டா மலைப்பகுதியில் தினமும் சிலர் இருசக்கர வாகனத்தில் நியாயவிலைக் கடை அரிசியையும், கள்ளச்சாராயத்தையும் மலைப்பகுதியில் கடத்திச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க மலைப்பகுதிக்குக் கீழ் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மலைப்பகுதி அடிவாரத்திலிருந்து 3 கிமீ முன்னரே அமைத்ததால், கடத்தல்காரர்கள் மாற்றுப்பாதையில் நியாயவிலைக் கடை அரிசிகளைக் கடத்திச் செல்வதாகத் தெரிகிறது.
எனவே மீண்டும் மலையடிவாரத்தில் சோதனைச்சாவடி அமைக்க, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மலையடிவார பகுதியான அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் இது குறித்து மனு அளிக்குமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என்று போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.