வேலூர்: ஓட்டேரி 2015ஆம் ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையின்போது கடைசியாக முழுமையாக நிரம்பி வழிந்தது. அதன் பிறகு ஐந்து முறை வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீர்த்த போதும் ஓட்டேரி நிரம்பவில்லை. தற்போது, பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீர்வரத்து ஓட்டேரியில் அதிகரித்து தற்போது முழுமையாக நிரம்பியுள்ளது.
மேலும், வேலூர் மாநகரப் பகுதியை ஒட்டியுள்ள சதுப்பேரி ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. தொரப்பாடி ஏரி 75 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பிவிட்டது. அரியூர், சித்தேரி ஏரிகளும் நிரம்பிவிட்டது. வேலூரைச் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயர அதிக வாய்ப்புள்ளது.
ஓட்டேரி வரலாறு
வேலூர் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக அம்மாவட்டத்தில் உள்ள பாலமதி, பள்ள இடையம்பட்டி, நாய்க்கனேரி மலைகளிலிருந்து மழைக்காலங்களில் வழிந்தோடக்கூடிய மழைநீரைச் சேகரித்து ஆண்டு முழுவதும் குடிநீர் விநியோகிக்கும் வகையில் சுமார் 106 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேய அரசு செயற்கையாக உருவாக்கிய ஏரி தான் வேலூரின் பிரதான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான ஓட்டேரி. 113.84 மில்லியன் லிட்டர் முதல் 140 மில்லியன் லிட்டர் வரை இந்த ஏரியில் நீரைத் தேக்கிவைக்க முடியும்.
நீர்த் தேக்கம்
ஓட்டேரி மலையிலிருந்து வழிந்தோடிவரும் நீர், ஆண்டு முழுவதும் வழிந்தோடிவரும் ஊற்று நீர், மழைக்காலங்களில் வரும் நீர் ஆகியவற்றை இந்த ஏரிக்குள் கொண்டுவருவதற்காக நாய்க்கனேரி கால்வாய், குளவி மேடு கால்வாய், மாந்தோப்பு கால்வாய், கணவாய் மேடு கால்வாய் போன்ற கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
உபரிநீர் வெளியேறக் கால்வாய்கள்
அதேபோல் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பியவுடன், அதன் உபரிநீரையும் வீணாக்காமல் பலவன்சாத்துக்குப்பம் ஏரிக்குக் கொண்டுசெல்லும் வகையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கால்வாய் அமைக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்து தொரப்பாடி ஏரிக்கு ஒரு இணைப்புக்கால்வாயும், தொரப்பாடியிலிருந்து சதுப்பேரிக்கு ஒரு இணைப்புக் கால்வாயும் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்டது.
அதேபோல், மற்றொரு கால்வாய் சங்கரன்பாளையம் வழியாக விஜயநகர பேரரசால் உருவாக்கப்பட்ட சூரிய குளத்துடன் இணைக்கப்பட்டது. இக்குளம் ஏற்கனவே பகவதி மலை, கோட்டை மலை ஆகிய இடங்களிலிருந்து வரும் நீர் வரத்துக்கால்வாய்களுடன் இணைக்கப்பட்டு அங்கிருந்து நிக்கல்சன்கால்வாய் கோட்டை அகழியுடனும், பாலாற்றுடனும் இணைக்கப்பட்டது. இத்தகைய நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றும் கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது ஓட்டேரி.
இதையும் படிங்க: ரூ.82 கோடி வருமான வரி.. உயர் நீதிமன்றம் கண்டிப்பு.. விழிபிதுங்கும் ஓபிஎஸ்!