வேலூர்: வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நேற்று (நவ 18) வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு பகுதியிலுள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர், பாதுகாப்பு காரணத்திற்காக அருகேயுள்ள அஜீசியா தெருவில் வசித்து வரும் ஹபீப் என்பவரது மாடி வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர்.
தொடர் மழையால் பலவீனமாக இருத்த அந்த கட்டடம் இன்று (நவ 19) காலை இடிந்து விழுந்தது. கட்டட விபத்து காரணமாக இடிபாடுகளில் சிக்கி மன்னன், அப்ரார், தௌலத், மனுல்லாஹ், மிஷா ஃபாத்திமா, அனிஷா, ரூஹி, தன்சிலா, கௌசர் என 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு துறையினர் (National Disaster Response Force) ஈடுபட்டனர். அவர்கள், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![Vellore House Collapse, vellore House, vellore news, gudiyatham news, National Disaster Response Force, house collapse death, வீடு இடிந்து, 8 பேர் பலி, 9 பேர் காயம், வேலூர் வீடு இடிந்து விபத்து, வேலூர் விபத்து, வேலூர் செய்திகள், பேரணாம்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13676944_145_13676944_1637307023472.png)
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மீட்பு பணிகளை பார்வையிட்டார். இது குறித்து பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், பேர்ணாம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவம் பெற்றுவருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பலவீனமான, பழைய கட்டடம் என்பதால் எளிதில் இடிந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை: 2 அரசு மருத்துவர்கள் கைது