வல்லரசு நாடுகளுக்கு இணையாக நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவது, அணுகுண்டு சோதனை நடத்துவது, அரசுத் துறைகளை டிஜிட்டல்மயமாக்குதல் என அடுத்தடுத்த தொழில்நுட்ப நகர்வை நோக்கி இந்தியா சென்றாலும் கூட சாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமை கிராமப்புறங்களில் கரும்புள்ளியாக இருந்துவருகிறது.
இதை எடுத்துகாட்டும் வகையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சுடுகாட்டுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை எரிக்க அங்கிருந்த பிற சமுதாயத்தினர் அனுமதிக்காத சம்பவம் வேலூர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நாராயணபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு அமைப்பதற்காக 50 சென்ட் இடம் ஒதுக்கி தரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்த செய்தியை வெளிக் கொண்டுவர உதவிய பத்திரிகைகள், ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், இதுபோன்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் இருக்கும் பிரச்னைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.