வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மேலாளராக உமாமகேஸ்வரி (38) என்பவர் பணியாற்றினார். அப்போது, பணமோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர், குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் ரூ. 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, கூட்டுறவு சங்கத் துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விசாரணைக்கு இடையே, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர்கள் போலி ஆவணம் மூலம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேஸ்வரியை மே 31ஆம் தேதி கைது செய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரியை இன்று (ஜூன் 2) பணியிடை நீக்கம் செய்து வங்கி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.97 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது