திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையம், உழவர் சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி அறைகள், பெண்கள் பூங்கா, நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களைத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் புனரமைப்புப் பணிகளுக்காக ஆய்வுமேற்கொண்டனர்.
அம்மா உணவகத்திற்குப் பின்புறம் ஆய்வுமேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உணவு, அழுகிய காய்கறிகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளதைக் கண்டு உடனே அவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து அமைச்சர் நிலோபர் கபீல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
வாணியம்பாடியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை அனுமதி அளிக்க மறுத்துவருவதால் அதனைப் பார்வையிட்டு, மாற்று ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆராய்ந்தோம்.
வாணியம்பாடி நகரப் பகுதியில் அமைந்துள்ள இறைச்சி மார்க்கெட்டிற்கு இடம் பற்றாக்குறையாக இருப்பதாலும் சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டிற்காக புதிதாக ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு இயங்காமல் உள்ள பேருந்து நிலையத்தை பயன்படுத்துவது குறித்தும் நகராட்சிக்கு வருவாய் ஈட்டித்தரும் நோக்கில் இந்தப் பேருந்து நிலையம் நகரத்திற்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் இறைச்சி மார்க்கெட் அமைத்து அங்கே ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவது குறித்தும் கழிவுநீரை சுத்தம் செய்வது குறித்தும் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்துவருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், “வாணியம்பாடி நகரப்பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அவர்களின் கோரிக்கையை பூர்த்திசெய்வதற்காகப் பல்வேறு இடங்களை ஆய்வுசெய்துவருகிறோம்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளான சாலை வசதி கால்வாய் வசதி பெண்கள் பூங்கா, நவீனமயமாக்கப்பட்ட மார்க்கெட் உள்ளிட்டவர்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு நகராட்சி, சம்பந்தப்பட்ட துறையில் அலுவலர்களோடு ஆலோசனை மேற்கொண்டு வாணியம்பாடி நகரத்தை ஒரு வண்ணமயமான நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் வகுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக அமைச்சர் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவருக்குக் கொலை மிரட்டல்!