வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த மாதம் பெய்த கனமழையினாலும், ஆந்திராவில் பெய்த கனமழையினாலும் பொன்னை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 60 ஆயிரம் கனஅடி வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பொன்னை ஆறு, பாலாற்றில் சென்று கலக்கும் வழித்தடத்தின் குறுக்கே திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் பொன்னை ஆற்றுப்பாலத்தின் கீழ் லேசான விரிசல் நேற்று (டிசம்பர் 23) மதியம் ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ரயில்வே அலுவலர்களின் ஆய்வுக்குப் பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றுப் பாலத்தில் ரயில்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து மாலை 5.55 மணிக்குப் புறப்பட்ட ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் விரைவு ரயில், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.20-க்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் பயணிகள் மின்சார ரயில், அரக்கோணத்தில் மாலை 6.10 மணிக்குப் புறப்பட்டு ஜோலார்பேட்டை வரை செல்லும் பயணிகள் மின்சார ரயில்கள் திடீரென ரத்துசெய்யப்பட்டன.
முன் அறிவிப்பின்றி திடீரென ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் பணி முடித்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
காட்பாடியிலிருந்து அரக்கோணம் வழியாக சென்னை நோக்கிச் செல்லும் வழித்தடத்தில் ஒருவழி பாதையாக அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதால் பல ரயில்கள் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டு காலதாமதமாகச் செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: Kanchipuram: பொதுமக்கள் தொலைத்த 217 செல்போன்கள் மீட்பு - உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி