வேலூர் மாவட்டத்தின் முக்கிய மொத்தவிலை சந்தையான நேதாஜி சந்தையில் மலர், காய், கனி, மளிகை உள்ளிட்ட அனைத்து வகை கடைகளும் செயல்பட்டு வந்தன. கரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது. மேலும் இச்சந்தையில் பணியாற்றிய இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தற்போது கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேதாஜி சந்தை நேற்று (செப் 7) திறக்கப்பட்டது. இங்கு போதிய முன்னெச்சரிக்கை, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்க்கொண்டனர். இருந்த போதும் வழக்கத்துக்கு மாறாக சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.