நாகரிக வளர்ச்சி என்பது குறிப்பிட்ட சமூக, மதக் கோட்பாடுகளுக்குள் அடைப்பது அல்ல. மாறாக அனைத்து விதமான இனம், மதம், மொழி சார்ந்த மக்களுக்கும் சேர்ந்ததுதான் நாகரிக வளர்ச்சி. இதனை நிரூபிக்கும் வகையில் நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினர், நரிக்குறவர் இன மக்கள் கல்வி பயில்வது, தற்போதைய வாழ்க்கை நடைமுறையைப் பின்பற்றுவது என நாகரிக வளர்ச்சியில் தாங்களும் பங்கெடுத்து வருகின்றனர்.
இருப்பினும் அரசு சார்பில் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையான அளவு செய்து கொடுக்கப் படாததால், அரசு குறிப்பிட்ட எல்லைக்குள் தங்களை ஒடுக்கி வைத்திருப்பதாகவே அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம் அம்முண்டியில் சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் தங்களின் அடிப்படை வசதிக்காக ஏங்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அம்முண்டி பகுதியில் 70க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்குக் கடந்த 2011ஆம் ஆண்டு அரசு சார்பில் இலவசமாகச் சொந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. நாடோடிகளைப் போன்று பந்தல் அமைத்து சாலையில் வசித்த தங்களுக்குச் சொந்த வீடு கிடைத்தபோது, இனி வாழ்வை நிம்மதியுடன் நகர்த்தலாம் என நரிக்குறவ மக்கள் மகிழ்ந்தனர்.
ஆனால், அரசு கொடுத்த வீடுகளில் பணிகள் முழுமை அடையாததால், நாள்தோறும் சிரமத்துடன் வசித்து வருகின்றனர். குறிப்பாக, வீடுகளில் சரிவர சிமென்ட் பூசப்படாமலும், மேற்கூரைப் பணிகள் முழுமையடையாமலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகுவதால் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர் இந்த அப்பாவி நரிக்குறவ மக்கள்.
அதேபோல் குறுகிய பரப்பளவுடன் ஒரே ஒரு அறை மட்டுமே இந்த வீட்டில் இருப்பதால், அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்டோர் போதிய இடம் இல்லாமல் சொந்த வீடு இருந்தும் சாலையிலேயே வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தங்களின் பாரம்பரிய தொழிலான ஊசிமணி விற்பது போன்ற சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தற்போது விநாயகர் சதுர்த்தி என்பதால், விநாயகருக்குக் குடை தயாரித்து விற்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பில் தங்களுக்குக் கடன் உதவி உள்ளிட்ட எந்த ஒரு உதவியும் செய்து கொடுக்கப்படாததால் இன்னும் தாங்கள் பின்தங்கியே இருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் ஆதார் அட்டை முதல் பான் அட்டை வரை அனைத்து ஆவணங்களும் இருந்தும் அரசு அதிகாரிகள் தங்களை மதிப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
வங்கியிலோ அல்லது வேறு ஏதாவது அரசு நிறுவனங்களிலோ தங்களுக்குக் கடனுதவி வழங்கினால், வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்வோம். ஆனால் அது போன்று அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்பதே நரிக்குறவர்களின் பிரதான குற்றச்சாட்டாகவுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து,தங்களின் வீடுகளில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக கழிவறை, குடிநீர், சரியான இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்துடன் தங்கள் வாழ்வை நகர்த்துவதாக நரிக்குறவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.