வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பரதராமி பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி (70). இவருக்கு சின்னம்மா (40) என்ற மகளும், முனிராஜ் (55) என்ற மகனும் உள்ளனர்.
திருமணம் ஆன முனிராஜ் தனது குடும்பத்தினருடன் தனியாக வசித்து வந்துள்ளார். திருமணம் ஆகாத சின்னம்மா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய், தங்கையிற்கு சொந்தமான ஆறு ஏக்கர் விவசாய நிலத்தை தனக்கு எழுதி கொடுக்கும்படி முனிராஜ் தொடர்ந்து அவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (ஜூன்10) காலை விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தாய், சகோதரியிடம் முனிராஜ் மீண்டும் தகராறு செய்துள்ளார்.
அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த முனிராஜ், அருகில் கிடந்த தென்னை மட்டை, கற்களை கொண்டு இரண்டு பேரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தகராறில் தங்கை சின்னம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாய் இந்திராணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து முனிராஜ் பரதராமி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இது குறித்து பரதராமி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.