வேலூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த பந்தேரிபள்ளி பகுதியில் தனியார் வஜ்ஜிரம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. அங்கு மேற்குவங்க மாநிலம் பீம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர் (30) என்பவர் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்துவந்துள்ளார்.
சமீபத்தில் தொழிற்சாலையில் புதிய ஊழியர்களாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் தொழிற்சாலையில் நேற்று இரவு வேலை பார்த்துவந்த மன்சூருக்கும், புதிதாக பணியில் சேர்ந்த ஜெய்னூல் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் மோதலில் முடிந்தது.
இது குறித்து ஜெய்னூல் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காவலர்கள் மன்சூரை காவல்நிலையம் அழைத்து விசாரணை செய்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இன்று தொழிற்சாலை அருகில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் இருக்கும் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி மன்சூர் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் அறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவலரகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.