வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் பலர் கள்ளத்தனமாக துப்பாக்கியை பயன்படுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவளஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவல்துறையினர் நேற்று வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஞ்சுமந்தை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி(40), தொங்கு மலை கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜ்(25), குள்ளையன் (32) ஆகிய மூன்று பேரிடம் கள்ளத்துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திம்மாம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முனிராஜ் என்பவர் துப்பாக்கிகளை திருட்டுத்தனமாக உருவாக்குவதுடன் அதை பழுதுபார்க்கும் வேலையும் செய்து வந்ததையடுத்து, அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் திருப்பத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இப்படி வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து ஐந்து கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கைது நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உரிய அனுமதி பெறாமல் துப்பாக்கி பயன்படுத்துவது தவறு. எனவே, கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருப்பார் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அதையும் மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.