வேலூர்: பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - வித்யா தம்பதி . இவர்கள் கல்குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான இவரது மகள் சத்யா(17) பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுமியின் நிலையை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரை சந்தித்துப் பேசினர்.
மேலும் மாணவியின் பள்ளிப் படிப்புக்கான செலவை, தாங்களே ஏற்றுக்கொள்வதாகக் கூறி சத்யாவை மேற்கொண்டு படிக்க வைக்க சம்மதம் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், சத்யா 532 மதிப்பெண்கள் பெற்றார்.
பின்னர் நீட் தேர்வில் பங்கேற்று 119 மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றார்.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று(ஜன 27) தொடங்கியது. இதில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று (ஜன 27) சென்னையில் நடந்தது.
இதில் அரசுப்பள்ளி மாணவியான சத்யாவிற்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்த முதல் மாணவியாகவும், மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த முதல் மாணவியாகவும் சத்யா இருப்பது குறிப்பிடத்தக்கது.