வேலூர் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதியுள்ளது. அந்த நேரத்தில் சேலத்திலிருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உடையந்த அள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (53) மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேரம் போராடி அனைவரும் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.
தற்போது காயமடைந்த பயணிகள் 9 பேர் வேலூர் அரசு மருத்துவமனையிலும், 8 பேர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் போதை சாக்லேட் விற்பனை - ராஜஸ்தான் மாநில வியாபாரி கைது!