வேலூர்: மாவட்ட காவல் துறையின் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சி பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உங்களது ஸ்மார்ட்போனின் உதவியுடன் இந்த இணைப்பைக் கிளிக் செய்தோ, அல்லது கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தோ 'கூகுள் படிவம்' உதவியுடன் பூட்டப்பட்ட வீடு குறித்த தகவல்களை அளித்தால், உங்கள் வீட்டைப் பாதுகாக்க வேலூர் மாவட்ட காவல்துறையினர் தயாராக உள்ளனர்.
இந்த படிவத்தில் தங்களுடைய பெயர், தொடர்பு எண், வீட்டு முகவரி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் எண், எந்த தேதியிலிருந்து, எந்த தேதி வரை வெளியூர் செல்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.
இதற்காகத் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவை இல்லை. வீட்டிலிருந்தபடியே ஓரிரு நொடிகளில் படிவத்தை நிரப்பிவிடலாம். மக்கள் பயன்படுத்தும்படியான ஒரு எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'கூகுள் படிவம்' மூலம் பெறப்பட்ட தகவல்கள், உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும். பிறகு, அத்தகவல்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும். அங்கு பீட் பேட்ரோல், ப்ரைகேடியர் போன்ற ரோந்துப் பணியில் இருக்கக்கூடிய காவலர்கள் ரோந்து செல்லும் போதும் தகவலின் மூலம் பெறப்பட்ட வீட்டைத் தொடர்ந்து பாதுகாப்பார்கள்.
இது குறித்து ஈடிவி பாரத்துக்கு வேலூர் மாவட்ட எ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் அளித்த சிறப்புப் பேட்டியில், "வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் செல்லும் அனைவரும் தங்கள் வீடு பூட்டப்பட்டிருப்பது குறித்து தகவல் அளித்தால் உங்களுடைய வீட்டை எங்களால் பாதுகாக்க முடியும். மேலும் மாவட்டத்தில் குற்றங்களைக் குறைக்கவும் இது உதவும். உங்களது வீட்டின் மீது காவல்துறையினரின் பார்வை இருந்து கொண்டே இருக்கும்" என்றார்.
இந்த முறையில் தினமும் எத்தனை கோரிக்கைகள் வருகின்றன?
தினமும் எங்களுக்கு கிட்டதட்ட 10 கோரிக்கைகள் வருகின்றன. நகரப் பகுதிகளில் மட்டும் சுமார் 100 முதல் 120 பூட்டப்பட்ட வீடுகளை காவல்துறையினர் தினமும் கண்காணித்து வருகின்றனர். இதனை 300 ஆக அதிகரிப்பதே எங்களது இலக்கு.
இந்த புதிய நடைமுறை போதுமான அளவிற்கு மக்களிடம் சென்று சேரவில்லை. பல்வேறு குடியிறுப்பு பகுதிகளில் இந்த கியூஆர் கோடையும் படிவத்திற்கான இணைப்பையும் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து விநியோகிக்க உள்ளோம். இதனால் தினமும் 50 முதல் 60 கோரிக்கைகள் வர வாய்ப்பு உள்ளது.
இதனை வருங்காலத்தில் மேம்படுத்தத் திட்டம் உள்ளதா?
வேலூரில் மக்கள்தொகை அதிகம் என்பதால் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே பாதுகாப்பை எளிமையாக வழங்க நாங்கள் குற்றம் மேப்பிங் (Crime Mapping) எனப்படும் ஒரு முறையை உருவாக்கி வருகிறோம். அதில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற முக்கியமான குற்றச் சம்பவங்கள் (Property Offence) நடைபெற்ற இடங்களை மேப் செய்துள்ளோம். இதனைக் கடந்த ஒன்றரை மாதங்களாகச் செய்து வருகிறோம்.
இதன் மூலம் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறக்கூடிய முக்கிய ஹாட்ஸ்பாட்களை கண்டறிந்துள்ளோம். இது போன்ற இடங்களை முதலில் கவனம் செலுத்தி அவற்றைப் பாதுகாப்பதற்காக கம்யூனிட்டி போலீசிங் போன்ற முறைகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கிரைம் மேப்பிங் உதவியுடன் குற்றம் நடைபெறும் முக்கிய பகுதியை ஜியோ லொக்கேஷன் முறையில் துல்லியமாகக் கண்டறிந்து குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கூகுள் ஃபார்மை எளிமையாக ஹேக் செய்து விடலாமே? இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படாதா?
கூகுள் ஃபார்ம் தகவல்கள் எளிதாக ஹேக் செய்யப்படலாம் என்ற ஒரு ஐய உணர்வு உள்ளது. ஆனால், ஒரு குற்றவாளியின் பார்வையிலிருந்து இதனை யோசித்தோமானால் இந்த கூகுள் ஃபார்ம் மூலம் பூட்டப்பட்ட வீட்டின் தகவலைப் பெற ஹாக்கிங் படிக்க வேண்டும், நீண்ட முயற்சிக்குப் பின் அதனை ஹேக் செய்த பிறகுதான் அந்த தகவல்களைப் பெற முடியும்.
ஹாக்கிங் செய்து பூட்டப்பட்ட வீடுகளை விவரங்களைப் பெறுவது என்பது கடினமான ஒரு விஷயம். தெருவில் நடந்து சென்றாலே பூட்டப்பட்ட வீட்டைக் குற்றவாளி எளிமையாகக் கண்டுபிடித்துவிடுவான்.
பூட்டப்பட்ட வீட்டைக் கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு குற்றவாளிக்கு இதைவிடப் பல எளிமையான வழிமுறைகள் உள்ளன. எனவே இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
மேலும் அடிப்படையான பாதுகாப்புகளை உறுதிப்படுத்தி தான் இந்த முறையை நாங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளோம். நீங்கள் அளிக்கும் தகவல்கள் எங்களிடம் மிகவும் பத்திரமாக இருக்கும். அதை யாராலும் எளிதில் பெற்றுவிட முடியாது என்றார்.
ஒட ஒட கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் - திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்