வேலூர் மாவட்டம் அணைகட்டு அடுத்த அல்லேரி மலை மீது மலை வாழ் மக்களிடம் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற எட்டு காவலர்கள் மீது நெல்லிமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரிகள் தாக்கியதில் உதவி ஆய்வாளர் சிவராமன், இரண்டாம் நிலை காவலர் ராகேஷ் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து நெல்லிமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் அனைவருமே ஊரை காலி செய்து தலைமறைவாகினர்.
இது தொடர்பாக அணைகட்டு காவல் நிலையத்தில் 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இவர்களை பிடிக்க வேலூர் டிஎஸ்பி திருநாவுகரசு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மலை பகுதியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட நெல்லிமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்த துரைசாமி, கணேசன் ஆகிய இரண்டு பேர் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று வேலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசர் தலைமையிலான 30 தனிப்படை காவல்துறையினர் நேற்று (செப் 9) முதல் அல்லேரி மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (செப் 10) மலையில் பாதுங்கியிருந்த ஊமையன், கோனையன், காடையன், போகன், சத்தியராஜ், ரஞ்ஜித், ராஜேந்திரன், அஜித், மணிகண்டன், கோபி, ராஜேந்திரன் ஆகிய 11 பேர் தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்த பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சரணடைந்த முக்கிய குற்றவாளி கணேசனுக்கு தற்போது கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.