வேலூர்: திமுக சார்பில் காட்பாடியை அடுத்த வன்றந்தாங்கல் கிராமத்தில் துரைமுருகன் தலைமையில், கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன் "வரலாற்றிலேயே முதல் முறையாக காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டத்தை ரத்துசெய்தது இந்த அதிமுக அரசுதான்.
நாங்கள் விவசாய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோருவது அரசியல் நோக்கத்திற்காக அல்ல. விவசாயிகளின் நலனுக்காகவே இதை எதிர்கிறோம். ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மாநில சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். பிறகுதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் இரவோடு இரவாக பெண்ணை கடத்தி திருட்டு தாலி கட்டுவதுபோல இச்சட்டத்தை இயற்றியுள்ளார்கள்.
ஒபிஎஸ் இபிஎஸ் கருத்து வேறுபாட்டால் அரசு அலுவலர்கள் குழம்பிப்போய் உள்ளார்கள். தொடர்ச்சியாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவந்தாலும், நாங்கள் அதை நீதிமன்றத்தில் சந்திப்போம். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மண், ஒரே கொள்கை என்பது ஜனநாயகத்தை அடியோடு பெயர்த்து எறியக்கூடியதாகத்தான் உள்ளது" என்றார்
கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் நேற்று (அக். 02) நடக்க இருந்த கிராம சபைக் கூட்டங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் ரத்துசெய்யப்பட்ட நிலையில் திமுகவினர் கிராம சபைக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.