வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ரஜினி ரசிகர் மன்றம் உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வந்தவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அதில் தலைமை தாங்கிய தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். வரும் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்தவுடன் தொண்டர்களின் கருத்து கேட்டு செயற்குழு, பொதுக்குழு கூடி முறையாக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். சிறையிலிருந்து வரும் சசிகலாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் சசிகலாவால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து தானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் வரும் சட்டப்பேர்வைத் தேர்தலுக்கு தமிழ்நாடு முழுவதும் தலைவர் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.