சீனா, தென் கொரியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வைரஸ் தடுப்பு மருந்து (லைசால்) தெளிக்கும் பணிகளை ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடக்கிவைத்தார்.
பேருந்துகளில் பயணிகள் கைவைக்கும் இடங்கள், டயர்களில் சுகாதாரப் பணியாளர்கள் மருந்து தெளித்தனர். இதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா தொடர்பாக தமிழ்நாட்டில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கைவைக்கும் இடங்களில் லைசால் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், யாருக்காவது காய்ச்சல் இருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவை, மதுரை உள்ளிட்ட நான்கு இடங்களில் கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்கப்போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, வேலூரில் விஐடி பல்கலைக்கழகம், சிஎம்சி மருத்துவனையில் வடமாநிலத்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள், நோயாளிகள் ஏராளமானோர் உள்ளனர்.
அவர்கள் சொந்த ஊர் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வைரஸ் ஆராய்ச்சி மையம் வேலூரிலும் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவைக்க முடிவுசெய்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: பெங்களூருவுக்கு அடிமைகளாகக் கடத்திவரப்பட்டவர்கள் மீட்பு