பேராசிரியர் மாணவர்களுடன் ஆய்வு
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இயங்கி வரும் புனித இருதயக் கல்லூரித் தமிழ்த்துறை துணை பேராசிரியர் முனைவர் பிரபு, தனது மாணவர்களுடன் ஆராய்ச்சி நடத்தினார். வாணியம்பாடியை அடுத்த அம்பலூர், கொடையாஞ்சி தேங்காய் தோப்பு வட்டம் கானாறு பகுதியில் மண்ணில் புதைந்தவாறு நடுகல் ஒன்று கிடைத்தது. இக்கல் இரண்டு துண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருந்தது.
அந்த கல்லை சுத்தம் செய்து பார்த்தபோது சோழர்கால கலைப்பாணியில் இருந்தது. அக்கல்லில் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில், மாட்சிமை தாங்கிய மாவீரன், கையில் கேடயத்துடன் கம்பீரமாக உள்ளார். அவரது இடக்கை தாங்கியிருக்கும் கேடயமானது செவ்வக வடிவத்தில் முப்பரிமாணத்தில் செதுக்கப்பட்டிருந்தது.
போர் வரலாறு
அவ்வீரன் தனது கூந்தலை சடாமுடி போல் முடிந்துள்ளார். போரில், எதிரி எய்த அம்பானது, அவனது தோளில் பாய்ந்து மார்பினை துளைத்து வெளிவந்ததுபோல் செதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மாபெரும் வரலாற்று போர் நிகழ்வை தன்னகத்தே தாங்கி நிற்கும் நடுகல் ஆழமான கடல் போன்று சப்தமின்றி அமைதி காக்கிறது.
12ஆம் நூற்றாண்டு
இந்த நடுகல் ஏறக்குறைய ஆறு அடி உயரமும் நான்கு அடி அகலமும் கொண்டதாக இருக்கலாம். ஆனால் தற்போது நான்கு அடி அகலமும் மூன்று அடி உயரமும் கொண்ட வீரனின் வயிற்றுப் பகுதி அளவு மட்டுமே கிடைத்துள்ளது. எனினும் எழுத்து பொறிப்புகள் எதுவும் இல்லை. இது 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்காலத்தை ஒத்ததாக இருக்கலாம் .
கோரிக்கை
இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் பிரபு கூறும்போது, “இப்பகுதியில் அரசர்கள் போர் புரிந்திருக்கூடும். அப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக இங்கே நடுகல் அமைக்கப் பெற்றிருக்கலாம். இப்பகுதியில் ஆங்காங்கே சில கற்கள் தென்படுகின்றன. ஆகவே இப்பகுதியை தொல்லியல் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்றார்.
நிலக்கொடை
மேலும் அம்பலூர் பகுதியில் கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு ஒன்றுள்ளது. இதில் மன்னர்கள் நிலத்தை பொன் கொடுத்து வாங்கி, கொடையாக வழங்கினார்கள் என பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சில எழுத்துகள் காலஓட்டத்தில் தேய்ந்து போய்விட்டன. ஆகவே, முழுமையான தகவல்களை அறிவதில் சிக்கல் உள்ளது.
கல்வெட்டு
அக்கல்வெட்டில், "கொற்றனூர்..... விரபக்கற் பொன் கொண்டு நடார்க்க.....போகமாக விற்றுக் கொண்டார்க்கே .....தோ...கப் பொன் கொண்டு கொ.... பொற...அ.. று குழுகூர்ப் பாட்டிய இதனாக் கெல்லை ...... செறுவின் மேற்கும் ஆற்றேற்றத்திலி வடக்கும் காஞ்சி மரத்தின் கிழக்கும் ..ள்ள...............வர் போகம ஆயிங்கு....த்திரன் கொண்டு.... பொன்....பொன்ன...காட்டி" என பொறிக்கப்பட்டுள்ளது.
தேய்மானம்
கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள், ஆங்காங்கே சிதைந்திருப்பதாலும் ஒரு பகுதி மட்டுமே கிடைத்திருப்பதாலும் முழுமையான பொருள் அறியமுடியவில்லை. பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு " மங்கலச் சொல் " மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச்சொல், எழுதியவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
பூங்குன்றன் தகவல்
கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம்பெற்றிருக்கும், ஆனால் இக்கல்வெட்டு முழுமையாக கிடைக்காததால் இவற்றை அறிய முடியவில்லை என முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குனர் முனைவர் பூங்குன்றன் முன்பே ஆராய்ச்சி மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.
சதிக்கல்
கொடையாஞ்சி பகுதியில் உள்ள ஓர் வீட்டின் சுவற்றில் பழமையான 'சதிகல்லினை ' வைத்து பூசிவிட்டனர். இச்சதிகல் குறிப்பிடுவது போரில் வீரன் மரணம் அடைந்தால் அவனுடைய மனைவியும் உடன்கட்டை ஏறும் நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் அப்பெண்ணின் நினைவாக இச்சதிகல் செதுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடதமிழ்நாட்டின் கீழடி
மேலும் தொல்லியல் ஆய்வு குறித்து பேராசிரியர் பிரபு கூறுகையில், “நாங்கள் எங்கள் மாணவர்களுடன் களஆய்வு மேற்கொண்டபோது இதுவரை 30க்கும் மேற்பட்ட ' நடுகல் ' மற்றும் கல்வெட்டுகள் கண்டறிந்துள்ளோம். தென்தமிழகத்தின் கீழடி போன்று வட தமிழகத்தில் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் செல்லும் வழியில் உள்ள இந்த குண்டுரெட்டியூர். இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது பல வரலாற்று புதினங்களை கண்டறிந்துள்ளோம்.
கல்லூரியில் கண்காட்சி
கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கோடாரிகள், கல் ஆயுதங்கள், உள்பட பல பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன. அதனுடன் சங்ககால மக்கள் பயன்படுத்தியதாக கருதப்படக்கூடிய கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், மணிகள், கறுப்பு வண்ண பூச்சி மண்பாண்ட ஓடுகள், மற்றும் பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்கள் மற்றும் நெசவு செய்ய பயன்படும் தக்கலி போன்றவையும் கிடைத்துள்ளன. தொல்லியல் மற்றும் வரலாறுகளின் மீது ஆர்வம் வரும் வகையில் இதனை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புனித இருதயக் கல்லூரியில் கண்காட்சியாக வைத்துள்ளோம்.
அரசுக்கு வேண்டுகோள்
இங்கு கிடைத்துள்ள பொருட்கள் கீழடி அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களுடன் பொருந்தும் அளவிற்கு உள்ளன. ஆகவே, தமிழ்நாடு அரசும் தொல்லியல் துறையும் குண்டுரெட்டியூர் பகுதியில் கவனம் செலுத்த வேண்டும். இங்கு தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டால் வடதமிழ்நாடும், தமிழ்நாடு வரலாற்றிலும் பண்பாட்டிலும் மிக முக்கிய இடமாக அமைந்துள்ளது என்று சொல்லுவதற்கு சான்றாக அமையும் என்பது இதன் மூலம் தெரியவரும்.” என்றார்.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு!