வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தவர் தினேஷ் (26). இவரது மனைவி ரூபிகா ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். தினேஷ் பணிபுரியும் கால் டாக்சி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கடனைக் கேட்டு அந்த நிறுவனத்தின் ஆள்கள் தினேஷையும் அவரது மனைவியையும் நேற்று (பிப். 11) இரவு மிரட்டி அழைத்துச் சென்ற நிலையில், விடியற்காலை ஐந்தரை மணிக்கு மனைவியை மட்டும் வீட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரூபிகா வீட்டிற்கு வந்தவுடன், தனியார் கார் நிறுவனத்தின் கைப்பேசி எண்ணிலிருந்து 'பணம் தேவைப்படுகிறது பணம் கொண்டுவா' என தினேஷ் கூறியுள்ளார். அதற்குள்ளாக சிறிது நேரத்தில், ரூபிகாவிடம், தினேஷ் தூக்கிட்டு இறந்துவிட்டதாக மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரூபிகா நேரில் சென்று பார்த்தபோது கணவர் தினேஷ் சடலமாகக் கிடந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த பாகாயம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் தனது கணவர் வாங்கிய கடனுக்காக அழைத்துச்சென்று கொல்லப்பட்டதாகவும் தனது கணவரின் சந்தேக மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உயிரிழந்த தினேஷின் மனைவியும், உறவினர்களும் பாகாயம் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் ஏறியபின் காணாமல்போன பள்ளி மாணவி - சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் காவல் துறையினர்