ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்(45). இவர் ஏலகிரி மலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 6ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.
பின்னர் அந்நபர்கள் அருளின் மகன் ராபின் என்பவருக்குக் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு ரூ.10 லட்சம் கொடுக்கவில்லை என்றால், அருளை கொன்றுவிடுவதாக கூறி அழைப்பைத் துண்டித்துள்ளனர். மீண்டும் சிறிது நேரம் கழித்து தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் கொடுத்தால் மட்டுமே அருளை உயிரோடு விடுவோம் எனக் கூறியுள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அருளின் குடும்பத்தார் ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஐ.ஜி நாகராஜ், டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பிரவேஷ்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து அருளை கடத்தியவர்களைத் தேடி வந்தனர்.
இந்த சமயத்தில் காவல் துறையினர் அருளை தேடுவதையறிந்த கடத்தல்காரர்கள், அருளை இடமாற்றம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் பிடியிலிருந்து தப்பிவந்த அருள், அருகில் உள்ள கிராமத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் ராபினுக்கு, அவர் இருக்கும் இடத்தை கூறியுள்ளார்.
இதனையறிந்த காவல் துறையினர் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு ராபினுடன் சென்று, அருளை மீட்டு ஏலகிரி மலை காவல் நிலையத்திற்கு அழைத்துனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஏலகிரி மலை பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அதேப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சம்பத் (43) மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து பத்து நாட்களாக சம்பத்தை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஏலகிரி மலை அடுத்த பள்ளக்கனியூரில் மறைந்திருந்த சம்பத்தை காவல் தறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பத், அருளிடம் ஒரு லட்சம் ரூபாய்க் கடன் கேட்டு வந்ததும், அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அருளை கடத்தியதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 60ஆயிரத்து 500 மதிப்பிலான கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.