சென்னையைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர், வீட்டு மனைகளை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இது தொடர்பாக வீட்டு மனை ஒன்றின் அங்கீகாரம் பெற, அரக்கோணம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவாவை, முத்துராஜ் சில தினங்களுக்கு முன்பு அணுகியுள்ளார். அப்போது அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு தர வேண்டும் என்று ஜீவா கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவ்வளவு பணம் தர முடியாது என முத்துராஜ் மறுத்துள்ளார். இறுதியாக ரூபாய் 56 ஆயிரம் பணம் தந்தால் அனுமதி வழங்குவதாக ஜீவா உறுதியளித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களிடம் முத்துராஜ் தகவல் கொடுத்துள்ளார். இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அரக்கோணம் தொடர்வண்டி நிலையம் அருகே வைத்து ஜீவாவிடம், முத்துராஜ் வழங்கியுள்ளார்.
இதனை மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், நேரடியாக ஜீவாவைக் கைது செய்தனர். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிக் கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவாவைப் பணி இடைநீக்கம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.