வேலூர்: காட்பாடியை அடுத்த அம்முண்டி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இடத்தை பெண்களுக்கான எஸ்சி இடமாக அரசு அறிவித்துள்ளது.
ஊரில் சொற்பமான எண்ணிக்கையில் வெறும் மூன்றே மூன்று பட்டியலின சமூகத்தினர் இருக்கக்கூடிய நிலையில், இந்த இடத்தை பொது இடமாக அறிவிக்க வேண்டுமென்று அந்த ஊர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த செப்டம்பர் 12, 15 ஆகிய தேதிகளில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் செப்டம்பர் 22ஆம் தேதி கிராமத்திலுள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஒரு தலைவர், ஒன்பது வார்டு உறுப்பினர் கொண்ட இந்தக் கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கான இடத்தை பொதுப் பிரிவில் மாற்ற வழியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பயனளிக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அம்முண்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு மாற்றக்கோரி மனுதாரர் அளித்த மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தேர்தல் புறக்கணிப்பு
இச்சூழலில், இங்குள்ள தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மேலும் தலைவருக்கான இடத்தை பொதுப் பிரிவிற்கு மாற்றாத வரை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக அவ்வூர் மக்கள் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து கூறியது போன்றே இன்று (அக் 06) ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குகளை முற்றிலும் செலுத்தாமல் தற்போது தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
ஆயிரத்து 33 பெண் வாக்காளர்கள், ஆயிரத்து 12 ஆண் வாக்காளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 45 வாக்குகள் உள்ள இந்த ஊராட்சியில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் ஊரிலுள்ள 5 வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை: பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்கும் சிசிடிவி!