வேலூர்: பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி சூழலியல் செயற்பாட்டாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் பங்கு ஊழியர்கள் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சூழலியல் செயற்பாட்டாளர் ஸ்ரீகாந்த். இவர் உள்ளி பாலாற்று கரையோரம் ஆக்கிரமிப்பு பிடியிலிருந்த 25 ஏக்கர் நிலத்தை மீட்டு, தற்போது அங்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆறாயிரம் (6000) மரக்கன்றுகளை நட்டு வளர்த்துப் பராமரித்து வருகிறார்.
இச்சூழலில் வெயிலின் தாக்கத்தால் கடந்த இரண்டு வாரங்களாக செடிகள் வாடி வருவதால், செடிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்ச உதவி கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை அணுக இருந்தார். அந்த வகையில் நேற்று (பிப். 26) மாவட்ட ஆட்சியர் குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்க வருவதை அறிந்து அங்குச் சென்றுள்ளார்.
அப்போது தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போக, குடியாத்தம் நகரிலுள்ள யுவராஜா பெட்ரோல் பங்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது இரண்டு 20 ரூபாய் நோட்டுடன் ஒரு 10 ரூபாய் நாணயத்தைக் கொடுத்துள்ளார். அப்போது பத்து ரூபாய் நாணயம் செல்லாது என கூறிய பெட்ரோல் பங்கில் பணியாற்றுபவர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துள்ளனர்.
தேர்தல் உலா - 2021: தூத்துக்குடி எதிர்பார்ப்பும், களநிலவரமும்
"வங்கிகளிலும், பிற கடைகளிலும் செல்லும் போது, நீங்கள் வாங்க மறுப்பது ஏன்" என ஸ்ரீகாந்த் கேட்டதற்கு, ஸ்ரீகாந்தின் இருசக்கர வாகனத்தைப் பிடுங்கி வைத்துக்கொண்டு "10 ரூபாய் நாணயத்தை தங்கள் பெட்ரோல் பங்க் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு வந்து வாகனத்தை வாங்கி செல்" எனக் கூறி பெட்ரோல் பங்கின் வங்கி எண் முத்திரை குத்தப்பட்ட காசோலையைக் கொடுத்தனுப்பியுள்ளனர்.
சூழலுக்காகவும், ஊர் மக்களுக்காகவும் தன்னை வருத்திக்கொள்ளும் ஒருவரை இச்சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை எண்ணி அங்கிருந்தவர்கள் வேதனையடைந்தனர். இதனையடுத்து அருகிலுள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சென்ற ஸ்ரீகாந்த் 10 ரூபாய் நாணயத்தை பெட்ரோல் பங்க் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதற்கிடையில் குடியாத்தம் கோட்டாட்சியர் மன்சூதுக்கு கைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கோட்டாட்சியரின் உதவியுடன் ஸ்ரீகாந்தின் வாகனத்தை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் திருப்பி கொடுத்துள்ளனர்.
![10 rs coin issue in vellore, 10 ரூபாய் பிரச்னை, வேலூர் செய்திகள், vellore news, 10 ரூபா எல்லாம் செல்லாது, சூழல் காப்பாளர் ஸ்ரீகாந்த், சூழலியல் செயற்பாட்டாளர் ஸ்ரீகாந்த், சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீகாந்த், சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10799771_185_10799771_1614417970450.png)
இது குறித்து குடியாத்தம் கோட்டாட்சியர் மன்சூத் அவர்களிடம் கேட்டபோது, “இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவந்த உடன் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பேசி ஸ்ரீகாந்தின் இருசக்கர வாகனம் மீட்டுக் கொடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காதவாறு குடியாத்தயம் பகுதியிலுள்ள அனைத்து தரப்பு வியாபாரிகளையும் அழைத்து அறிவுறுத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.