பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் சாலை வரியை குறைக்க வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன ஓட்டுநர்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று(பிப்.4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் நவீன், மாநில துணைச் செயலாளர் அலெக்ஸ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார், "தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் உயர்வால் வாகன ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மனிதன் முதல் முதலமைச்சர் வரை வாகனம் ஓட்ட கண்டிப்பாக ஓட்டுநர் தேவை. ஓட்டுநர்களின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்வதில்லை.
கரோனா காலத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு பத்து பைசா கூட யாரும் நிவாரணம் வழங்கவில்லை. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடகை வாகன தொழிலில் இறங்கியுள்ளன. அவர்கள் அதிக அளவிலான கமிஷன் எடுத்துக் கொள்கிறார்கள். இரவு பகல் பாராமல் வேலை பார்க்கும் வாகன ஓட்டுநர்களுக்கு எவ்வித பலனும் கிடைப்பதில்லை.
எங்களது தொழிலில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இந்தச் சூழ்நிலையில் நாங்களும், எங்களது குடும்பத்தினரும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். நாங்கள் சம்பாதிக்கும் பணம் அதிக அளவில் வட்டிக்கு தான் செல்கிறது" என்றார்.
இதைதொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை சங்க நிர்வாகிகள் அளித்தனர்.
இதையும் படிங்க: ஏலம் விடும் நிகழ்ச்சியில் போராட்டம் நடத்திய 10க்கும் மேற்பட்டோர் கைது