கரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனால் வாடகை வாகனங்கள் வெளியூர்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஆகஸ்ட் 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் கிடைப்பது கிடையாது எனவும்; அதனால் இ-பாஸ் விதிமுறையைத் தளர்த்த வேண்டும் எனவும்; ஆறு மாதங்களுக்கு வாகனங்களுக்கான சாலை வரியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஓட்டுநர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கடன் தவணை தொகைக்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும்; அதற்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும்; வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்வதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து ஓட்டுநர்கள் வழங்கினர்.